Tuesday, 7 January 2014

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!



எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!


மனித மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்கவும்,நிம்மதியாக வாழவுமே விரும்புகிறது.ஆனால் பலருக்கும் அது சாத்தியமாகவே இருப்பதில்லை.வருத்தம்,நோய்,துன்பம் தரும் நிகழ்வுகள் என்று மகிழ்ச்சியை பறிக்கும் எதிரிகள் இருக்கத்தான் செய்கின்றன.அப்படியானால் எப்போதும் சந்தோஷமாக எப்படி இருக்கமுடியும்? சரிதான்.ஒரு முக்கியமான விஷயம் இவை எல்லாம் தினமும் ஏற்படும் ஒரு விஷயமல்ல!


             நெருங்கிய உறவினரின் இழப்பு யாருக்கும் மகிழ்ச்சியை தராதுதான்.அதையே நினைத்துஏன் பல மாதம்,பல ஆண்டுகள் அந்த பாதிப்பிலேயே இருப்பதுதான் பிரச்சினை.இதுபோலவே மற்ற துன்பங்களுக்கும்,கடந்துவிட்ட கஷ்டங்களுக்கும் பொருந்தும்.நம்முடைய சிக்கல் என்பது ஏற்பட்டுவிட்ட பாதிப்பிலிருந்து எவ்வளவு விரைவில் மீண்டுவருகிறோம் என்பதே!


            மனிதனாக நீங்கள் பிறந்துள்ளதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும் இல்லையா? உலகம் எதற்காக இருக்கிறது அதை யார் படைத்தார்கள்? மறுபிறவி இருக்கிறதா? இல்லையா? நாம் என்னவாகப்போகிறோம்? இதெல்லாம் விடை இல்லாத கேள்விகள் தான்.ஆனால் நீங்கள் பிறந்துள்ளதன் காரணம் எனக்கு தெரியும்.அது எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு! அதை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு!


            எப்போதும் அப்படி இருக்க முடிவதில்லை என்பது உண்மைதான்.நூறு சதவீதம் என்பது ஒரு மாயை! அது முழுதும் உண்மையல்ல! அதனால் பெரும்பாலான நேரங்களில் உங்களால் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.எப்போதும் என்பது அதுதான்.என்னால் முடியவில்லை என்பவர்கள் முதலில் அதைப்பற்றி சிந்திக்க ஆரம்பிக்கவும்.உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக சந்தோஷத்தை தேர்ந்தெடுக்கவும்.


           மகிழ்ச்சிதான் உங்கள் நோக்கமென்று முடிவு செய்துவிட்டால் அதை பெறுவது எளிது.முதலில் நீங்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்களா? என்பதை கவனியுங்கள்.இல்லையென்றால் உங்களை சங்கடப்படுத்தும்,கவலைக்குள்ளாக்கும் விஷயம் எது என்று கண்டுபிடிக்கவும்.இப்போதே நீங்கள் பாதி வெற்றியடைந்த்து போலத்தான்.


           உறுத்தும் விஷயத்தைக் கண்டுபிடித்து விட்டாலே அதை தீர்க்கும் வழிகளும் உங்களுக்கு தோன்ற ஆரம்பிக்கும்.இயற்கை அனைவருக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் சக்தியை கொடுத்திருக்கிறது.தீர்க்க முடியாவிட்டால் உறவினரையோ,நண்பர்களையோ,அதற்கென உள்ள நிபுணர்களையோ அணுக வேண்டும்.பிரச்சினை தீர்ந்தால் மகிழ்ச்சிதானே வரும்.


       முக்கியமான விஷயம் உங்களை சுற்றி உள்ள  மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று நினைத்தால் மட்டுமே நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.நமது பக்கத்தில் நான்குபேர் அழுது கொண்டிருந்தால் உங்கள் மனநிலையும் பாதிக்கவே செய்யும்.அல்லது மற்றவர்கள் கஷ்ட்த்தில் இருக்கும்போது நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு சிகிச்சை தேவை.


           பிரபல பதிவர் ஒருவர் குறிப்பிட்ட சிலரின் பதிவு ஹிட்டாகிவிட்டால் அன்று முழுக்க சாப்பாடு,தூக்கம் எதுவும் இல்லையாம்.இந்த மாதிரி விஷயங்களால் உங்கள் சந்தோஷம் பாதிக்கப்படுவது கஷ்டம்.மகிழ்ச்சி சட்ட்த்துக்கும்,நெறிகளுக்கும் உட்பட்ட பொருள்களில் இருக்கவேண்டும்.நிகழ்காலத்தில் வாழ்வது,தவறுகளை திருத்திக்கொள்வது போன்றவை முக்கியம்.குழந்தையாக இருங்கள் .வாழ்வு எளிதாகும்.

நம்பிக்கை....?


நம்பிக்கை

'என் பையன் மிகவும் நல்லவன்' என்று நீ நம்பிவிட்டால், எந்தவித தொல்லையும் உனக்கு இருக்காது.


பையன் கெட்டவனாக இருக்கலாம்; அதன் விளைவுகளை  அனுபவிக்க வேண்டியவன் அவனே.


மனைவி உத்தமி, பத்தினி என்று நம்பி விட்டால், உன்னை பொறுத்தவரை காதல் சுகமாகி விடும்.


தவறான நடத்தைக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டியவள் அவளே.


வேலைக்காரனையும் நம்பி விட வேண்டும்; அதற்கு அவன் துரோகம் செய்தால் அவனை விலக்கிவிடு; அதற்காக யாரைக் கண்டாலும் அவ நம்பிக்கை கொள்ளாதே.


நம்பிக்கையோடு கோவிலுக்குப் போ.


'நம்பினார் கெடுவதில்லை' என்பது நான்கு மறை தீர்ப்பு.


வாஸ்கோடகாமாவின் நம்பிக்கை, புதிய நிலத்தைக் கண்டுபிடித்தது.


கொலம்பஸ்ஸின் நம்பிக்கை, அவன் தாய் நாட்டுக்கு ஒரு புதிய நிலத்தை தந்தது.


ஆயுதங்களில்லாத சர்ச்சிலின் நம்பிக்கை, இரண்டாவது  உலகப் போரின் போது இங்கிலாந்துக்கு வெற்றியை தேடி தந்தது.


கடலில் விழுந்து தத்தளித்து ஒருவன் இரண்டு மாதங்கள் நீந்திக் கொண்டிருந்தான் என்றும், பிறகொரு கப்பலில் கரை சேர்ந்தான் என்றும் நான் படித்திருக்கிறேன்.


நம்பிக்கை மட்டும் இல்லாதிருந்தால் அவன் பிணமாகி மீன்களுக்கு இரையாகி இருப்பான்.


பிரகலாதனின் நம்பிக்கை, கடவுளைக் காட்டிற்று.


கண்ணனின் நம்பிக்கை பாரத போரில் வெற்றிப் பெற்றது.


நான் முன்னேறியது  படிப்பினால் அல்ல; நம்பிக்கையால்.


அப்போது எனக்கு பதினான்கு வயது. கவிதை எழுதுவதில் எனக்குக் கொள்ளை ஆசை.


ஒரு நாள் அதிகாலையில் எழுந்து நான்கு வரி எழுதினேன்;


வீணா கானம் விடியுமுன் கேட்டது;
கானாமிர்தம் காதுக்கினிமை !
தூக்கம் கலைந்தது துள்ளி எழுந்தேன்!
படுக்கையிலிருந்தே பருகினேன் அமுதம்!


--- இந்த நான்கு வரிக்கு மேல் எழுத தெரியவில்லை. விட்டுவிட்டேன்.


பதினேழாவது வயதில் முதன் முதலாக முழுக் கவிதை எழுதினேன். அந்த வயதிலேயே ஒரு பத்திரிக்கையில் ஆசிரியரானேன்.


ஒரு நண்பர் எத்தனை ஆயிரம் ரூபாய் இருந்தாலும் என்னிடம் கொடுத்து வைப்பார்-- நம்பிக்கை.


நம்பிக்கைக்குத் துரோகம் செய்கிறவன் பெரும் தண்டனைக்கு ஆளாவான்--காண்ணாரக் கண்டிருக்கிறேன்.


என்னிடம் அநியாயமாகப் பணம் வாங்கியவர்கள், அந்த பணத்தை நியாயமாக செலவழித்தது இல்லை;  அது துரோகத்துக்கு தண்டனை.


தேசத்தை நம்பு; தெய்வத்தை நம்பு; உலகம் உன்னை புகழும்.


'இது நம்மால்  முடியும்' என்று எண்ணு; முடிந்துவிடும்.


மனோதிடமும், வைராக்கியமும் இந்த நம்பிக்கையின் குழந்தைகளே!


ஒரு துறையில் முனைந்து நின்று நம்பிக்கையோடு முன்னேறினால், நீ நினைக்கும் அளவுக்குப் புகழும், பொருளும் வந்து சேரும்.


கடலைக்  கடக்க கப்பலை தந்தது எவனோ ஒருவனின் நம்பிக்கை.


இவற்றுள் தலையாயது  தெய்வ நம்பிக்கை.


தெய்வ நம்பிக்கை பொருள் தருகிறது; நிம்மதி தருகிறது; நியாயமாக நடக்க செய்கிறது.


மருத்துவரிடம் நம்பிக்கை வைத்தால் மருந்தில்லாமலேயே பாதி நோய் தீர்ந்து விடுகிறது.


நம்பிக்கை உடையவன் தான் வேதந்தியானான், விஞ்ஞானியானான்.


நம்பிக்கை இல்லாதவனுக்கு சுகமும் அற்பம்; ஆயுளும் அற்பம்.


தண்ணீரைப் பால் என்று நம்பினால் அது பால் தான்; வேப்பிலை இனிக்கும் என்று நம்பினால் இனிக்கும்.


நம்பிக்கைக்கு மிகவும் தேவையானது மனம்.


அது உன்னிடமே இருக்கிறது; அதற்காக நீ ஒரு பைசாவும் செலவழிக்க தேவை இல்லை.

-கவியரசு கண்ணதாசன்

Monday, 6 January 2014

அன்புள்ள கணவருக்கு...




ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!

அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம்.

நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்..

ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.

அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே.

அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.

அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்..

இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்..

ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!!

ஆண்மையை வீரியப்படுத்தும் கருப்பட்டி...





உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

கிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம்.

சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்
தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக கருப்பட்டி கருதப்படுகிறது. இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?




மனிதர்களில் சிலருக்கு ஏற்படும் நட் அலர்ஜி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பல்வேறு கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிட்டால் ஏற்படும் ஒவ்வாமை குறித்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள், கர்ப்ப காலத்தில் பெண்கள் அனைத்துவகையான கொட்டைகளையும், பருப்புகளையும் சாப்பிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஒவ்வாமை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மனிதர்களில் சிலருக்கு இந்தமாதிரியான கொட்டைகளையும் பருப்புகளையும் சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.

 சிலருக்கு அது தோலில் தடிப்பு, அரிப்பு போன்ற சிறு சிறு உபாதைகளை ஏற்படுத்தினாலும் சிலருக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய தொண்டை அடைப்பு வரை செல்லக்கூடியதாக இருக்கிறது. ஒரு முறை இந்த ஒவ்வாமை வந்துவிட்டால், இது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தொடர் பிரச்சனையாக நீடிக்கிறது. இப்படியான கொட்டைகள், பருப்புகள் ஒவ்வாமையால் அவதிப்படுபவர்கள் இந்தமாதிரியான கொட்டைகளையும், பருப்புகளையும் வாழ்நாள் முழுவதும் சாப்பிடாமல் தவிர்ப்பது மட்டுமே அவர்கள் இந்த ஒவ்வாமை உபாதைகளில் இருந்து விடுபட இருக்கும் ஒரே வழி.
இந்த பின்னணியில் இந்தமாதிரியான ஒவ்வாமை ஒரு சிலருக்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்தும், அதை ஆரம்பகட்டத்திலேயே தடுக்க முடியுமா என்பது குறித்தும் மருத்துவ உலகில் நீண்டநாட்களாகவே தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
சுமார் எட்டாயிரம் குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களிடம் ஆய்வு செய்யப்பட்ட மருத்துவர்களின் முடிவுகள், ஜமா குழந்தைநல மருத்து இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவர்களின் ஆய்வின் முடிவுகளின்படி, கர்பகாலத்தில் தாய்மார்கள் எல்லாவிதமான கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம், கருவிலேயே அந்த குழந்தைகளுக்கு இந்த பருப்புக்கள் மற்றும் கொட்டைகள் பழகிவிடுவதால், அவர்கள் பிறந்து பெரியவர்களாகும்போது அவர்களுக்கு இந்த பருப்புகள் மற்றும் கொட்டைகளினால் ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரியவந்திருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
 
அதேசமயம், இந்த ஆய்வின் முடிவுகள் முடிந்த முடிவல்ல என்று ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். காரணம், இது தொடர்பாக ஐக்கிய ராஜ்ஜியம் உட்பட வேறு நாடுகளில் செய்யப்பட்ட வேறுபல ஆய்வுகள், கர்பகால உணவுக்கும் குழந்தைகளின் எதிர்கால ஒவ்வாமைக்கும் எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லை என்பதை காட்டியிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
 
இப்போதைக்கு இப்படியான மாறுபட்ட ஆய்வின் முடிவுகள் தெரிய வந்திருப்பதால், கர்பகால பெண்கள் கொட்டைகள் மற்றும் பருப்புகள் சாப்பிடுவதாலேயே அவர்களின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இது தொடர்பான ஒவ்வாமை ஏற்படாது என்று உறுதியாக கூறமுடியாது என்றும் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்த இருவேறுபட்ட ஆய்வின் முடிவுகளுமே அந்தந்த இனக்குழுக்களுக்கு சரியாக இருந்தாலும், உலகம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய பொதுவானதொரு அளவுகோளை இந்த விஷயத்தில் எட்டுவது கடினம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் கவுசல்யாநாதன்.

தெரிந்து கொள்வோம்..!



  • தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது.

  • 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.

  • பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

  • சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய பெயர் இலங்கை.

  • காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

  • மனித உடலிலேயே மூக்கின் நுனிதான் மிகவும் குளிர்ச்சியான பாகம்.

  • பிரேசில் நாட்டில் ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும். இது பறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்!

  • தேங்காய் என்பது காயும் அல்ல; கனியும் அல்ல. அது விதை.

இந்தியாவில் இனி இரண்டு 'Time Zone': வடகிழக்கு மாநிலங்களுக்கு தனி "மணி நேரம்"!



அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பின்பற்றப்படும் "மணி நேரம்" நடைமுறைக்குப் பதிலாக முன்பு கடைபிடித்த பழைய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது.

இதன்மூலம் டெல்லி, சென்னையில் காலை 8 மணி என்றால் அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 9 மணியாக இருக்கும்.

அட்சரேகைகள்-தீர்க்க ரேகைகள்:


பூமியின் பரப்பில் குறுக்கும், நெடுக்குமாக கற்பனைக் கோடுகள் வரையப்படுகின்றன. பூமியை குறுக்காக பிரிக்கும் கோடுகள் அட்சரேகைகள் (Latitudes) எனப்படுகின்றன. பூமியை நீளவாக்கில் பிரிக்கும் கோடுகள் தீர்க்க ரேகைகள் (Longitudes ) எனப்படுகின்றன.

டெல்லியை விட 1 மணி நேரம்:

இந்த தீர்க்க ரேகைகளை வைத்தே ஒரு இடத்தின் நேரம் தீர்மானிக்கப்படுகிறது. கிரீன்வீச் மீன் டைம் 12 ஆக இருந்தால் டெல்லியில் நேரம் 5.30 மணி. ஆனால், இந்தியாவில் இரு தீர்க்க ரேகைகள் செல்கின்றன. இதன்படி வட கிழக்கு மாநிலங்களின் நேரம் டெல்லியை விட 1 மணி நேரம் அதிகமாக இருக்க வேண்டும்.

அர்த்தமில்லாத வாதம் பேசி..

ஆனால், டெல்லி ஆட்சியாளர்கள் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தாங்களாகவே கூறிக் கொண்டு, டெல்லியில் 5 மணி என்றால் அஸ்ஸாமிலும் 5 மணி தான் என்று அர்த்தமில்லாத வாதம் பேசி அதையே வட கிழக்கு மக்களின் தலையிலும் கட்டினர். இதனால், டெல்லியில் சூரிய உதயம் ஆவதற்கு முன்பே அஸ்ஸாமில் சூரிய உதயம் ஆகிவிடுகிறது. அங்கு சூரிய அஸ்தமானம் ஆகி ஒரு மணி நேரத்துக்குப் பின்பே டெல்லியில் சூரிய அஸ்தமானம் நடக்கிறது

அஸ்ஸாம்....

அதாவது அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சூரிய உதயம் என்பது அதிகாலை 4 அல்லது 5 மணிக்கே வந்துவிடும். அதேபோல் மாலைப் பொழுது என்பது 4 அல்லது 5 மணிக்கு முடிந்து இருளாகிவிடும். தற்போது இந்தியாவின் பிறபகுதிகளில் இருப்பதைப் போல அதாவது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பணி நேரம் கடைபிடிக்கப்படுவதால் பொதுவாக பகல் பொழுதில் வேலை நேரம் குறைவாகவும் இரவு சற்று கூடுதல் வேலை நேரமாகவும் இருந்து வருகிறது.

தேயிலைத் தோட்டங்கள்..

ஆனால் அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 150 ஆண்டுகாலத்துக்கு முன்னர் பகல் பொழுதை அதிகம் பயன்படுத்தும் வகையிலான மணி நேர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுதான் தற்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உற்பத்தித் திறன் குறைகிறது...


அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் இந்திய மணி நேர நடைமுறைப்படுத்துவதால் பகல் நேர வேலை மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் பணி மற்றும் உற்பத்தித் திறன் குறைகிறது என்பது பொதுவான ஆதங்கம். ஆனாலும் டெல்லியின் 9 மணி முதல் 5 மணி வரையிலான அதே நேரம் தான் வட கிழக்கு மக்களின் அலுவலக, பள்ளி நேரமாக உள்ளது. இதன்மூலம் அந்தப் பகுதி மக்களின் அடிப்படை உரிமையையைக் கூட டெல்லி அதிகார வர்க்கம் மதிக்காமல் இருந்து வந்தது.

தருண் கோகோய்:

இது குறித்து கருத்து தெரிவித்த அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய், அஸ்ஸாமின் தேயிலை தோட்டங்களில் பின்பற்றப்படுகிற நடைமுறைதான் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொருந்தும். அப்போதுதான் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். இதனால் தேயிலைத் தோட்டங்களில் பின்பற்றப்படும் நேர முறையையே நாங்களும் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இப்படி நேரம் மாற்றி அமைக்கப்பட்டால் அஸ்ஸாமில் காலை 6 அல்லது 7 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை வேலை நேரம் இருக்கும். ஆக இந்தியாவின் இதர பகுதிகளில் ஒரு நேர முறையும் வடகிழக்கில் ஒரு நேர முறையும் கடைபிடிக்கப்படும்.